Sunday, 15 December 2013

வருடங்கள் , நாட்கள் ( தமிழும் சீனமும் ) ::



தமிழராகிய நாம் புது ஆண்டிற்கு 60-வருட ( 1. பிரபவ முதல் 60. அட்சய வரை )  சுழற்சியை பயன்படுத்துகிறோம். இதையே சீனர்களும், ஜப்பானியர்களும் ( now outdated, though ) பின்பற்றுகின்றனர்.

நம்முடைய கிழமைகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையே இது வரை அறியப்படாத தொப்புள்கொடி உறவுகள் உள்ளன.

Ex ::::: ஞாயிறு கிழமை  – Sunday ( English ) - dies Sōlis ( Latin ) - hêméra Hêlíou ( Old Greek ) – nichiyobi ( Japanese ). எல்லாமே சூரியனைக் குறிக்கும்.
Ex :::: திங்கள் கிழமை – Monday ( English ) - dies Lūnae ( Latin ) -  hêméra Selếnês ( Old Greek ) – getsuyobi ( Japanese ). எல்லாமே சந்திரனைக் குறிக்கும்.

தமிழில் இருந்துதான் இவை வந்தனவா ? இல்லை நாம் அவர்களை பின்பற்றுகிறோமா ?

Friday, 13 December 2013

செல்லச் சிறுமியும் – சாதியும்



ஆலந்தூர் ( சென்னை ) ஒன்றிணைந்த கோர்ட் வழிதான் ஆபிஸ் செல்ல வேண்டும். கோர்ட் ஒன்றும் பெரிய பிரம்மாண்டமானதாகவோ, பயம் தருவதாகவோ இருக்காது. எதிரில் 1 டீக்கடை, 1 இளநீர் கடை. பொதுவான நடமாட்டம் இருக்கும், சில சமயம் அதிகமாக. உள்ளே நடக்கும் கேசைப் பொறுத்தது என எண்ணுகிறேன். நேற்று அங்கு டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு போலிஸ் வேன். உள்ளே 10-12 இளைஞர்கள். சாதிச் சண்டையாம், வாய்தாவுக்காக அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். வேன் கதவு திறந்துதான் இருந்தது. இரண்டு போலிஸ் அதனருகே. வேனுக்கு வெளியில் கைதிகளின் பக்கமில்லாமலும், தூரமில்லாமலும் ஆறு ஏழு இளம் பெண்கள். ஒவ்வொரிடமும் பெரிதும், சிறிதுமான குழந்தைகள். சற்று விலகி வெள்ளை வேஷ்டி, சட்டையில் சில பெரியவர்கள். அந்த பெண்களின் மாமாவாக, அப்பாவாக இருக்கவேண்டும். அவர்கள் முகத்தில் ஒரு பச்சாதாபம், பரிதவிப்பு. பெணகளிடம் வீட்டு கவலையை சொல்ல விரும்பாத, முடியாத ஒரு இறுக்கம், வாய்தா கிடைக்குமா என்ற கவலை. கைதிகளிடம் ஒரு வெறித்த பார்வை. குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி என்ன கேட்டதோ, தாய் சொன்னாள் ‘ உங்க அப்பா அந்த சாதியாளை வெட்டிபுட்டா அதான்’
‘அந்த அங்கிளுக்கு வலிக்காதாம்மா?’
என்னால் டீ குடிக்க முடியவில்லை.


இங்கு குழந்தைகளிடம்தான் ஈரம் இருக்கிறது. சாதி, மதம், இனம் பார்க்காத பகுத்தறிவு இருக்கிறது. "தம்பிக்கு"  டாக்டர் - மு. வரதராசன் எழுதிய கடிதங்களில் ஒன்று. இக்காலத்திற்கும் மிகப்பொருந்தும்.
அன்புள்ள தம்பி,
……………………………….   எந்த முயற்சி செய்தாலும் ஒற்றுமையும் கட்டுப்பாடும் கட்டாயம் தேவை. இந்த இரண்டும் இருந்திருந்தால், தமிழர் வல்லமையான இனம் என்ற எண்ணம் டில்லிக்கு ஏற்பட்டிருக்கும். அதற்கு மாறாகவே இப்போது உள்ளது. இப்போது தமிழரைப் பற்றி பிறர் என்ன நினைக்கின்றார்கள்? மூளையர் சிலரும் முரடர் சிலரும் ஏமாளிகள் பலரும் உள்ள கூட்டம் தமிழர் என்றுதான் நினைக்கின்றார்கள். ஆங்கிலேயர் லண்டனில் தலைமை நிலையமும் டில்லியில் கிளைநிலையமும் வைத்து ஆட்சி நடத்திய போதும் அப்படித்தான் நினைத்தார்கள். தமிழரில் மூளையரை விலை கொடுத்து வாங்கிவிடுவது. முரடரை நயத்தாலும் பயத்தாலும் அடக்கிவிடுவது - இந்த இரண்டும் செய்தால் போதும்; மற்றத் தமிழர் பேசாமல் கிடப்பார்கள். இப்படித்தான் வெளியார் நம்மைப் பற்றிக் கருதுகிறார்கள்.
அதற்கு ஏற்றாற்போலவே, நாம் நம்முடைய பொதுத் தேவைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடுவதில்லை. ஆனால் நமக்குள் இருக்கும் கட்சி வேறுபாடுகளுக்காகப் பிரிந்தும் பிளந்தும் போராடுவதில் மட்டும் வீரம் காட்டிவருகிறோம். இந்த வேறுபாடுகளும் இருக்கலாம்; ஒரு மூலையில் இருக்கலாம்; மேடையில் இருக்கவேண்டியதில்லை. இங்கிருக்கும் பத்திரிகைகளும் பொதுப் போராட்டங்களுக்கு விளம்பரம் தருவதில்லை; சில்லறைப் பூசல்களையே விளம்பரப் படுத்துகின்றன; சேர்ந்து தாளமும் போடுகின்றன.
தமிழரிடையே பொதுவாகப் பிரிக்கும் ஆற்றல் வளர்ந்துவிட்டிருக்கிறது; பிணிக்கும் ஆற்றல் வளரவில்லை. ஒரு மேடையில் இரண்டு கட்சிகள் சேர்ந்து பொதுத்தேவை பற்றிப் பேசுவது தமிழகத்தில் கண்டு வியக்கும்படியான புதுமையாகவே உள்ளது. அது என்றைக்குப் பழக்கமான- இயல்பான - நிகழ்ச்சியாகப் பெருகுமோ, தெரியவில்லை.
தேர்தல் காலங்களில் தமிழரைக் கண்டு மற்றவர்கள் சிரிக்கின்றார்கள். ஓர் இடத்திற்குப் பத்துப் பதினைந்துபேர் நின்று போட்டியிடுவார்கள். கடைசியில் தமிழரல்லாத ஒருவன் தன்னைச் சார்ந்தவர்களின் ஓட்டுக்கள் எல்லாவற்றையும் சிதறாமல் ஒருசேரப் பெற்று இத்தனைத் தமிழரையும் தோற்கடித்துவிடுவான். பிறகு அந்தப் பொது எதிரியைக் கண்டு இத்தனைப் பேரும் நாணித் தலைகுனிந்தாலும் ஒருபடி முன்னேற்றம் என்று கருதலாம். அவன் வென்றானே என்று கவலைப்படுவதற்கு மாறாக, தன்னோடு போட்டியிட்ட தமிழர்கள் தோற்றதை நினைந்து ஒவ்வொரு தமிழனும் தனித்தனியே மகிழ்வான். பொதுவாகத் தமிழினம் தோற்கிறதே என்ற உணர்ச்சி தோன்றுவதில்லை; மற்றத் தமிழரை வீழ்த்தியது பற்றிய வீணான வீர உணர்ச்சியே தோன்றுகிறது. தன் இரண்டு கண்களும் போனாலும் சரி, தன் எதிரியின் ஒருகண்ணாவது போகவேண்டும் என்று ஒருவன் முயன்றதாக கதையில் படித்திருப்பாய். அத்தகைய வீண்வீரம் - வீரம் அல்ல. ஆணவம் - தமிழரிடையே மிகுதியாக உள்ளதே!
இவற்றை எல்லாம் எண்ணிப் பார். தமிழன், பொதுவாக, தன்னலம் மிகுந்தவன் என்று உணரலாம். தனித்தனியே தன்னலம் நாடிப் பொதுநலம் மறக்கும் கூட்டம் எப்படி ஒற்றுமை அடைய முடியும்? எப்படி முன்னேற முடியும்? மற்ற இனத்தாரைவிடத் தமிழர்க்குள் தன்னலம் மிகுதியா என்று நீ கேட்கலாம். ஆம் என்றே மறுமொழி சொல்லத் தோன்றுகிறது.
எண்ணிப்பார்; நான் தோற்றாலும் சரி, நம்மவன் எவனாவது வெற்றி பெறட்டும் என்ற உயர்ந்த எண்ணம் எத்தனை தமிழரிடையே காணமுடியும்? என் சொந்தக் கொள்கை புறக்கணிக்கப்பட்டாலும் சரி, தழிழினம் வளர்ந்த்து செழிக்கட்டும் என்ற உயர்ந்த நோக்கம் எத்தனைத் தமிழரிடையே காணமுடியும்? என் கட்சி அழிந்தாலும் சரி, தமிழ்நாடு வாழ்ந்து விளங்கட்டும் என்ற உயர்ந்த குறிக்கோள் எத்தனை தமிழரிடையே காணமுடியும்? தமிழரிடையே தன்னலம் மிகுதியா, பொதுநலம் மிகுதியா என்று ஆராய்ந்து அறிவதற்கு இந்த மூன்று 'பரீட்சை' வைத்துப்பார். நான் சொல்வதன் உண்மை தானாகவே விளங்கும்.
விதிவிலக்கு உண்டு. உயர்ந்தவர்கள் தமிழினத்தில் இல்லாமல் போகவில்லை. ஆனால் அத்தகையவர்கள் மிகச் சிலரே; ஒரு சிலரே. அவர்களால் மட்டும் நாடு முன்னேறிவிட முடியுமா? ஒற்றுமை ஏற்பட முடியுமா? பொதுவாக மக்களின் மனம் சீர்ப்பட்டால்தானே முடியும்?
பொதுவாக, தமிழன் முதலில் தன்னை நினைக்கிறான்; தன்னையே நினைக்கிறான். பிறகுதான் சில வேளைகளில் மேற்போக்காக மொழியையும் நாட்டையும் நினைக்கிறான். இவ்வளவு தன்னலம் முதிர்ந்திருப்பதால்தான், மிகப் பழங்காலத்திலிருந்தே பண்பாடு மிக்க இனமாக விளங்கியிருந்தும் இன்று தாழ்வான நிலையில் கிடக்கின்றது.
தன்னலம் மிகுந்தவனாக - முதலில் தன்னையே நினைப்பவனாக - தமிழன் இருக்கிறான் என்பதற்கு இன்னொரு சான்று சொல்லட்டுமா? தமிழன் ஒருவன் அதிகாரி ஆனால், தான் அதிகாரி என்ற எண்ணமே அவனுக்கு எப்போதும் இருக்கிறது. அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பிறகும், மாலை 5 மணிக்குப் பிறகும், ஞாயிற்றுக்கிழமை முதலிய விடுமுறை நாட்களிலும், கோயில் முதலிய பொது இடங்களிலும், விருந்து முதலிய பொது நிகழ்ச்சிகளிலும் அதிகாரி என்ற எண்ணமே நிறைந்து, மற்றவர்களிடமிருந்து விலகி உயர முயல்கின்றான். குடும்பத்தில் மனைவிமக்களின் முன்னும் அதிகாரியாகவே விளங்குவான் போலும்! ஆங்கிலேயன் அப்படி அல்ல என்பது சொல்லாமலே அறிவாய். அலுவலகத்தில் ஆங்கிலேயன் கடுமையாக நடந்துகொள்வான்; மாலை 5 மணிக்குப்பின் விளையாட்டுக் கழகத்தில் தோழன்போல் பழகுவான்; விருந்தில்களித்து மகிழ்வான்; கோயிலில் அமைந்து ஒழுகுவான். காரணம் என்ன? அவன்மனம் இடத்திற்கும் வேளைக்கும் சூழ்நிலைக்கும் நெகிழ்ந்து மாறி அமைகின்றது. அவன் உள்ளத்திலும் தன்னலம் உண்டு; ஆனால் குறைவு; அதனால்தான் அவன் நெகிழ்ந்து தோழனாக, மனிதனாக, அன்பனாக மாறி அமைய முடிகின்றது. தமிழனுடைய தன்னலமோ, இடம் வேளை சூழ்நிலை மொழி நாடு எதுவும் ஊடுருவி இடம் பெறாதவாறு இறுகியுள்ளது. அதனால் தமிழரில் அதிகாரி எங்கும் அதிகாரியாகவே இருக்கின்றான்; கட்சிஆள் எங்கும் (பொதுமேடையிலும் பொதுஇடங்களிலும்) கட்சி ஆளாகவே இருக்கிறான்.
தமிழனைத் தனியே பெயர் சொல்லிப் பழித்துப்பார்; உடனே சீறி விழுவான். ஆனால், அவனுடைய நாட்டையும் மொழியையும் இனத்தையும் பழித்துச் சொல்; பொறுமையோடு கேட்பான். ஆங்கிலேயனைத் தனியே பழித்துப்பார்; உன்னைப் புறக்கணிப்பான். அவனுடைய நாட்டையும் மொழியையும் பழித்துச் சொல்; பகையுள்ளம் கொள்வான். காரணம் மேலே சொன்னதுதான். தன் மொழியைவிடத் தன்நாட்டைவிடத் தானே முக்கியம் என்ற எண்ணம் தமிழனிடம் அவனை அறியாமல் ஊறிக்கிடக்கிறது. அது மட்டும் அல்ல; கட்சிப்பற்று மிகுந்தவனாய்த் தோன்றும் தமிழனும், நெருக்கடி நேருமானால், கட்சிநலத்தைவிடத் தன்னலத்தையே பெரிதாக நாடுவான். கட்சி சீர்குன்றினாலும் தான் வாழவேண்டும் என்று முயலவும் முயல்வான். இந்நிலையில் இவனுடைய நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் என்ன என்று சொல்வது?
உண்மையான நாட்டுப் பற்றுஇருக்குமானால், நாட்டை நினைக்கும் போதாவது தன்னை-தன்னலத்தை- மறக்கவேண்டாமா? அவ்வாறு மறக்கும் பண்பு இருந்தால், நாட்டின் பொதுத் தேவைகளுக்காகப் போராடும்போது ஒற்றுமைதானே ஏற்படாதா? ஒற்றுமை இல்லாதிருப்பதற்குக் காரணம் இப்போது விளங்கும் என எண்ணுகிறேன். பொதுத்தேவையை முதன்மையாக எண்ணும் மனம்தான் பலரையும் பிணைக்க முடியும். தன்னையே முதன்மையாக எண்ணும் மனம் சேர்ந்தவர்களையும் பிரிக்கவே முயலும்.
தேர்தல் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. அன்றுமட்டும் திடீரென்று ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் உரிய வகையில் கடமையைச் செய்ய முடியுமா? எதுவும் பழக்கத்தில் வந்திருந்தால்தான் முடியும். ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் உரிய வகையில் பலநாளும் பழகியிருந்தால், ஒருநாள் கூத்தாக நடைபெறும் தேர்தலிலும் அவ்வாறு நடந்து வெற்றி காணமுடியும்.
ஒரு கதை சொல்வார்கள். இரும்பைப் பொன்னாக்கும் கல் ஒன்று ஒரு மலையோரத்தில் இருப்பதாக ஒரு மந்திரவாதி சொன்னானாம். ஒரு சிறு இரும்புத்துண்டைக் கையில் வைத்துக் கொண்டு, அங்கிருக்கும் கற்களை ஒவ்வொன்றாக எடுத்து அதன்மேல் வைத்துப் பார்க்கச் சொன்னானாம். எந்தக் கல்லை வைத்தவுடன் அந்த இரும்பு பொன்னாகிறதோ அதுவே மந்திரக்கல் என்றானாம். கேட்டவன் அவ்வாறே மலையோரத்தில் நின்றுகொண்டு ஒவ்வொரு கல்லாக எடுத்து இரும்பின்மேல் வைத்து, அது பொன் ஆகாதது கண்டு உடனே வீசி எறிந்துவந்தானாம். வீசிய கற்கள் குவியல் குவியலாகக் குவிந்தனவாம். அவனும் இரவு பகலாகக் கற்களை எடுத்து எடுத்து எறிந்து களைத்துவிட்டானாம். கடைசியில் ஒரு நாள் திடீரென இரும்புத்துண்டு பொன்னாக ஒளி வீசியதாம். ஆனால், பாவம், அதற்குள் பொன்னாக்கிய அந்தக் கல் கையைவிட்டுப் போய்விட்டதாம். எறிந்து எறிந்து பழகிய பழக்கத்தால் உடனே அந்த மந்திரக்கல்லையும் கை எறிந்துவிட்டதாம். அவன் கதி என்ன ஆயிற்று? அப்படித்தான் தேர்தலிலும் பிரிக்கும் ஆற்றல் வளர்வதைக் காண்கின்றோமே தவிர, பிணைக்கும் ஆற்றலைக் காணோம். காரணம், பழக்கம்தான். மற்றக் காலங்களில் பிறர்மேல் பொறாமை கொண்டும், பிறர் மனத்தைப் புண்படுத்தியும், சேர்ந்தவர்களைப் பிரித்தும் தமிழர் வாழ்கின்றனர். இந்தப் பழக்கம் அன்றாட வாழ்க்கையில் ஊறிப்போன பிறகு, திடீரென ஒருநாள் காலையில் மாற்றிவிட முடியுமோ? முடியாது. அதனால் தேர்தலிலும் பொறாமை, இடையூறு, பகை இவைகளே விளைகின்றன. மந்திரக்கல் தேடியவனைப் போல் களைத்துச் சோர்வடைவதே கண்ட பயன்.
உன் அன்புள்ள,வளவன்.