Saturday 22 February 2014

ஒன்றே குலம் - 1


வீரனும், சூரனும் இன்று வேறு வேறு சாதி. வேறு வேறு  சடங்குகள். சாமி , சம்பிரதாயங்கள் கூட வேற வேற. ஆனால் இவர்களுடைய முப்பாட்டன்கள் மாவீரனும், மாசூரனும் ஒரே சடங்குகள், சாமி , சம்பிரதாயங்கள் கொண்டிருந்தனர். என்றால் இவர்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரே சாதியாக, ஒரே குலமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளதா ?
திருமணத்தில் இரண்டு சடங்குகள் முக்கியமானவை.
1. மணம் பேசுதல்.
2. மணம் முடித்தல்.

மணம் பேசுதலுக்கு முன் இஷ்ட தெய்வத்திடம் பூ கட்டிப்பார்த்து, நல்ல பூ எனில், நல்ல நாள் ஒன்றில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்குச் செல்வார்கள். தெருவில் இறங்கி நடக்கும்முன்  சகுனம் பார்த்து, கெட்ட சகுனம் எதுவும் இல்லாதபோது மேற்கொண்டு  செல்வார்கள்.  மாப்பிள்ளை  வீட்டார் சார்பில் பிள்ளையின் அப்பா,  அம்மா, தாய் மாமா, தலையாரி , மற்றும் பலர் இருப்பார்கள்.. மாப்பிள்ளை  வீட்டு பெண்களின் கைத்தட்டுகளில் இருப்பவை.
பரிசப் பணம் ( பெண்ணுக்குத் தர !!!! )
வெத்திலைப் பாக்கு,
அரிசி,
தேங்காய், வாழைப்பழங்கள்,
வெல்லம், புளி, பூ மற்றும் சந்தன குங்குமம்.


பெண்ணின் தாய் மாமனின் சம்மதம் மிக முக்கியமானது.. அவரால் திருணத்தை  எந்த தருணத்திலும் நிறுத்த முடியும். பெண்ணின் தாய் மாமனோ அல்லது அவர்கள் ஊர்த் தலையாரியோ பரிசத்தை சரி பார்த்து உறுதி செய்து கொள்வர். 
மாப்பிள்ளை வீட்டார் சார்பாக ‘ பரிசம் உங்களது, பெண் எங்களது ‘
பெண் வீட்டார் சார்பாக ‘, பெண் உங்களது, பரிசம் எங்களது ‘ என மூன்று முறை சொல்ல, சம்பந்தம் உறுதி செய்யப்படுகிறது. முதல் தாம்பூலம் பெண்ணின் தாய் மாமனுக்கே தரப்படுகிறது,

ஆச்சரியமாக இருக்கிறதா ? இதுவே தமிழரின் திருமண முறை, 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை.

பரிசப்பணமும், சில சடங்குப் பொருட்களும் மாறி வருமே அன்றி இந்த சடங்கு முறை ஒன்றாகவே இருந்தது. எல்லா குலத்திற்கும் இது பொதுவானதாகவே இருந்திருக்கிறது.
Reference : Castes and Tribes of Southern India, E Thurston.

வெள்ளாளர், வன்னியர், பள்ளர், பறையர், இடையர், மறவர் மற்றும் எல்லா குலத்திற்கும் இதுவே மரபு. என்றால் இவர்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரே குலமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளதா ?


No comments:

Post a Comment